Sunday, March 23, 2014

கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி

சங்ககாலத் தமிழ் எழுத்து தாமிழி என அழைக்கப்படும் தமிழ்ப் பிராமி

கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தமிழில் உள்ள மெய்யெழுத்து புள்ளி வைத்து எழுதப்படும் என்று கூறுகிறது. இதனை மெய்ப்பிக்கும் சான்று இதுவரை இல்லாமல் இருந்தது. இந்தக் கி.மு. காலத்துத் தமிழ்க் கல்வெட்டில் மெய்யெழுத்து புள்ளி வைத்து எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கல்வெட்டில் [க ழ க கோ ப ட ட ன் ம க ன் செ ரு மா (ன்) என எழுதப்பட்ட 14 எழுத்துக்கள் உள்ளன. இதனைக் [கழக்கோ பட்டன் மகன் செருமா]ன் எனப் பொருளோடு படிக்கலாம். இதில் உள்ள 14 எழுத்துக்க்களில் பட்டன், மகன் என்னும் சொற்களின் இறுதியில் வரும் இரண்டு மெய்யெழுத்துக்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். கேரள மாநிலம் கழசரக்கோடு மாவட்டம் காட்டு நீரோடைக்கு அருகில் உள்ள இந்தக் கல்வெட்டை கல்வெட்டியல் வல்லுநர் எம்.ஆர். ராகவ வாரியார் இதனைக் கண்ணடறிந்து படித்துள்ளார்.

இக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தமிழ்நாட்டிலுள்ள கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கால அளவினதான அம்மன்கோயில்பட்டி, அரசலூர் ஆகிய ஊர்களில் செய்யப்பட்ட அக்கழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துக்களோடு தொடர்புடையது என எழுத்துக்களைப் படித்தாய்ந்த டாக்டர் வாரியார் குறிப்பிடுகிறார். 

மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் வைநாட்டு எடுக்கல்பாறை கல்வெட்டு எழுத்துக்களோடு தொடர்புடையது அன்று எனவும் அவர் குறிப்பிடுகிறார். 

கேரள அரசு தொல்லியல் துறைக் களப்பணியாளர் கே. கிருஷ்ணராஜ், திருவனந்தபுரம் அரசுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இ. குன்னிகிருஷ்ணன், திருவனந்தபுரம் இ. ரத்னாகர நாயர் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உறுதுணை புரிந்துள்ளனர். 

தமிழ்-பிராமி எழுத்தாய்வுப் பணியில் சிறப்புற்றுத் திகழும் வி. வேதாசலம் “இக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று” எனக் கருதுகிறார்.



No comments:

Post a Comment