Tuesday, March 25, 2014

எகிப்து நாட்டில் தமிழர் பானை

எகிப்து, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோட்டுச் சில்லுகள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டுப் 'பெரெனிகே' துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானையோட்டுச் சில்லு இது.

இதில் கொ ற் ற பூ மா ன் என்னும் எழுத்துக்கள் உள்ளன.  இவற்றில் [ற], [ன] ஆகிய எழுத்துக்கள் தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்துக்கள்.

கொற்ற பூமான்  பயன்படுத்திய பானை இது. இவன் எகிப்து நாட்டுக்குச் சென்று வாணிகம் செய்திருக்கிறான்.

நன்றி - செய்தியும் படமும் ஐராவதம் மகாதேவன்


பானை எழுத்து

பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை-ஓடுகள் இந்தியாவிலேயே அதிகமான அளவில் தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளன. அவற்றைக் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலானவை எனக் கணித்துள்ளனர்.

அவற்றில் அக்காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அக்காலத் தமிழ் எழுத்தை இக்காலத்தில் தமிழ்ப்பிராமி எனக் குறிப்பிடுகிறோம்.

கொடுமணல் அகழ்வாய்வில் கிட்டிய பானைச்சில்லு இது.

இதில் கண்ணன் ஆதன் என்னும் எழுத்துக்கள் உள்ளன.

நன்றி - படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்


சங்ககால மோதிரம்

சங்ககாலத் தமிழர்கள் பொன், வெள்ளி, செம்பு கனிமங்களால் செய்த மோதிரங்களை அணிந்திருந்தனர்.

கருவூர் அமராவதி ஆற்றுப்படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட மோதிரத்தின் முத்திரையில் அக்காலத் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.

குறவன் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

நன்றி: படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்



குட்டுவன் கோதை வெள்ளிக்காசு

சங்ககால அரசர்களின் காசுகள் அகழ்வாய்வின்போது கிடைத்துள்ளன.
அவற்றில் அக்காலத் தமிழ் எழுத்துக்களில் அரசனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அக்கால எழுத்து தமிழ் பிராமி.

மற்றும்
பெருவழுதி செப்புக் காசு - கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
இரும்பொறை செப்புக்காசு - கி.பி. முதல் நூற்றாண்டு
ஆகியனவும் கிடைத்துள்ளன.

இந்தக் காசில் குட்டடுவன் கோதை என்னும் எழுத்துக்கள் உள்ளன.
இதன் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என ஐராவதம் மகாதேவன் குறித்துள்ளார்.
சங்ககால வரலாற்று நோக்கில் இது கி.பி. முதல் நூற்றாண்டு

நன்றி - படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்



Sunday, March 23, 2014

மகோதை சேரமான் பெருமாள் கல்வெட்டு

சேரமான் பெருமாள் (நாயனார்) செப்பேடு

சேரமான் பெருமாள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சேர நாட்டு மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்ட சேர மன்னர். கேரள மாநிலம் ஆரிக்கோடு – கருமாத்தூர் கோயிலுக்கு இந்தச் செப்பேடு உரியது. இதில் சேரமான் பெருமாள் மகோதை நகரில் இருந்துகொண்டு நாடாண்ட நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் படித்தாய்ந்து குறிப்பிடும் பேராசிரியர் அந்த நாளை 24 மே 871 எனக் கணித்துள்ளார். 





கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி

சங்ககாலத் தமிழ் எழுத்து தாமிழி என அழைக்கப்படும் தமிழ்ப் பிராமி

கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தமிழில் உள்ள மெய்யெழுத்து புள்ளி வைத்து எழுதப்படும் என்று கூறுகிறது. இதனை மெய்ப்பிக்கும் சான்று இதுவரை இல்லாமல் இருந்தது. இந்தக் கி.மு. காலத்துத் தமிழ்க் கல்வெட்டில் மெய்யெழுத்து புள்ளி வைத்து எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கல்வெட்டில் [க ழ க கோ ப ட ட ன் ம க ன் செ ரு மா (ன்) என எழுதப்பட்ட 14 எழுத்துக்கள் உள்ளன. இதனைக் [கழக்கோ பட்டன் மகன் செருமா]ன் எனப் பொருளோடு படிக்கலாம். இதில் உள்ள 14 எழுத்துக்க்களில் பட்டன், மகன் என்னும் சொற்களின் இறுதியில் வரும் இரண்டு மெய்யெழுத்துக்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். கேரள மாநிலம் கழசரக்கோடு மாவட்டம் காட்டு நீரோடைக்கு அருகில் உள்ள இந்தக் கல்வெட்டை கல்வெட்டியல் வல்லுநர் எம்.ஆர். ராகவ வாரியார் இதனைக் கண்ணடறிந்து படித்துள்ளார்.

இக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தமிழ்நாட்டிலுள்ள கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கால அளவினதான அம்மன்கோயில்பட்டி, அரசலூர் ஆகிய ஊர்களில் செய்யப்பட்ட அக்கழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துக்களோடு தொடர்புடையது என எழுத்துக்களைப் படித்தாய்ந்த டாக்டர் வாரியார் குறிப்பிடுகிறார். 

மேலும் இதில் உள்ள எழுத்துக்கள் வைநாட்டு எடுக்கல்பாறை கல்வெட்டு எழுத்துக்களோடு தொடர்புடையது அன்று எனவும் அவர் குறிப்பிடுகிறார். 

கேரள அரசு தொல்லியல் துறைக் களப்பணியாளர் கே. கிருஷ்ணராஜ், திருவனந்தபுரம் அரசுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இ. குன்னிகிருஷ்ணன், திருவனந்தபுரம் இ. ரத்னாகர நாயர் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உறுதுணை புரிந்துள்ளனர். 

தமிழ்-பிராமி எழுத்தாய்வுப் பணியில் சிறப்புற்றுத் திகழும் வி. வேதாசலம் “இக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று” எனக் கருதுகிறார்.



தமிழ்ப் பயிர்

தமிழ் இலக்கியங்களை உழுவோம்
தமிழ்ப்பயிர் வளர்ப்போம்
பலனைப் பகிர்ந்துகொள்வோம்